நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

25.12.10

ஒரு லட்சம் வராகனுக்கு விற்ற செருப்பு




மதன் மோகன்
மாளவியா

பிறப்பு: டிச. 25 (1861)


மதன் மோகன் மாளவியா காசி மாநகரத்தில் ஒரு இந்து பல்கலைக் கழகத்தை அமைக்க விரும்பினார். அதற்கான பொருளைப் பெற, பல  ஜமீன்தார்களையும், செல்வந்தர்களையும், நவாப்புகளையும் சென்று பார்த்தார்;  பொருள் பெற்றார்.

காசியை அப்போது ஆண்டு கொண்டிருந்த நவாப்பின் அரண்மனைக்கு சென்றார் மாளவியா. தன் நோக்கத்தை சொல்லிப் பொருளுதவி செய்ய வேண்டினார்.

அப்போது யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்றது. நவாப் “பொருள் தர முடியாது” என்று சொல்லியதோடு தன் காலில் இருந்த காலணி ஒன்றைக் கழற்றி மதன்மோகன் மாளவியா மீது எறிந்தான்.

சபை ஸ்தம்பித்து அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது. மாளவியா அந்தக் காலணியை கையில் எடுத்துக்கொண்டு “மிக்க நன்றி மன்னர் பிரானே” எனக் கூறி, அரண்மனையை விட்டு வெளியே வந்தார்.

வந்தவர், அரண்மனை வாசலில் ஒரு மேடையின் மீது ஏறி நின்று, “பெரியோர்களே, காசி மாநகரத்துச் சீமான்களே, சீமாட்டிகளே இதோ காசி மாநகரத்தின் நவாப் அணிந்த காலனி... ஏலத்திற்கு விடப்போகிறேன். எடுப்பவர்கள் எடுக்கலாம்''  எனச் சத்தமிட்டுக் கூவினார்.

பொதுமக்கள் ஆச்சரியத்தோடு வந்து, கால்பணம் அரைப் பணம், ஒரு பணம் என்று கூச்சலிட்டனர்.

இதைப் பார்த்த அரண்மனை அதிகாரி அவசரமாக உள்ளே ஓடி “அரசே உங்கள் காலணி ஏலம் போடப்படுகிறது. கால்பணம், அரைப்பணமாம். அவமானம், அவமானம் என்று சொல்ல, அதைக் கேட்டு திடுக்கிட்ட நவாப் தன் நிதிமந்திரியை அழைத்தார்.

“ஓடுங்கள் உடனே அதனை ஏலத்தில் எடுங்கள். என்ன செலவானாலும் சரி…” என ஆணையிட்டார். நிதிமந்திரி விரைந்து சென்றார். அதற்குள் ஏலம் சூடு பிடித்தது.

முடிவில் நிதிமந்திரி ஒரு லட்சம் வராகனுக்கு அச் செருப்பை ஏலம் எடுத்து மன்னரிடம் கொண்டு வந்தார்.

சற்று நேரத்தில் மீண்டும் உள்ளே வந்த மதன்மோகன் மாளவியா அவர்கள் “அரசே என் மீது தங்கள் செருப்பை எறிந்தமைக்கு மிகுந்த நன்றி. மற்றதை எறிந்தாலும் பெற்றுக் கொள்வேன்” எனப் பெருமிதத்தோடு சொல்லிச் சென்றார்.

-டாக்டர் கு.ஞானசம்பந்தம்
நன்றி: தன்னம்பிக்கை (சுயமுன்னேற்ற மாத இதழ்) 

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக