நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

5.2.11

குருவுக்கு பெருமை சேர்த்த நாயனார்


அப்பூதி அடிகள் நாயனார்  
திருநட்சத்திரம்: தை -  22 - சதயம்

அப்பூதியடிகள் சோழ நாட்டில் திங்களூரில் வசித்தவர். மிகுந்த சிவ பக்தரான இவர்,  அறுபத்து மூவருள் முதன்மையான நால்வருள் ஒருவரான  திருநாவுக்கரசு நாயனார் காலத்தில் 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருநாவுக்கரசர் சைவ சமய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளையும், அதனால் அவருக்கு நேர்ந்த துன்பங்களையும், அவற்றையெல்லாம் இறைநம்பிக்கையைத் துணைக்கொண்டு வெற்றிகரமாகக் கடந்ததையும் கேள்விப்பட்டு அவர்மீது அளவுகடந்த பக்தி கொண்டார். இதுவே அவரை ஒரு நாயனாராக மதிக்கப்படும் அளவுக்கு உயர்த்தியது. 

தமது ஆதர்ஷ நாயகர் பெயரில் தான தருமங்களும் தண்ணீர்ப் பந்தல்களும்   மடங்களும் நடத்திவந்த அப்பூதி அடிகளின் பெருமை திருநாவுக்கரசரையும் எட்டியது. திங்களூருக்கு ஒரு முறை சென்றிருந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின் இல்லம் சென்றார். யாரப்பா அந்த திருநாவுக்கரசர் என்று அப்பூதி அடிகளிடமே கேட்க, இதுகூடத் தெரியாமல் இருக்கலாமா என்று திருநாவுக்கரசரையே  கடிந்துகொண்டாராம் அப்பதி அடிகள். பிறகு உண்மை அறிந்த அப்பூதியடிகள், பெருமகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று அமுதுண்டு செல்லுமாறு வேண்டினார்.

அமுது பரிமாற இலை கொண்டுவரச் சென்ற அப்பூதியடிகளின் மூத்த மகன் திருநாவுக்கரசன் (தனது மக்களுக்கெலாம் தனது ஆதர்ஷ நாயகர் பெயரையே வைத்திருந்தார் அப்பூதி அடிகள்) பாம்பு தீண்டி இறந்து விடுகிறான். சிவனடியாரின் திருவமுதுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று கருதி மகனின் உடலை மறைத்து விட்டு அப்பரை உணவுண்ண வருமாறு அழைத்தார்.

ஆயினும் முகக்குறிப்பால் உண்மை உணர்ந்த திருநாவுக்கரசரும் மூத்த மகன் எங்கே என்று வினவினார். வேறு வழியின்றி உண்மையை உரைத்தார் அப்பூதியடிகள். அப்பூதியடிகளின் அன்பில் மனமுருகிய திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடி அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பித்தார். தமிழின் மந்திரச் சொல்லாற்றலுக்கு இன்றும் அந்தப் பதிகம் உதாரணமாகத் திகழ்கிறது.

சைவ அடியாரின் அடியாராகத் திகழ்ந்து மானிட சேவை ஆற்றிய அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரின் அடியொற்றி, நாயன்மார்களுள் ஒருவராக உயர்ந்தார். தெய்வீகத் தமிழின் பெருமையும் தனது மகன் மறுவாழ்வு பெற்றதன் மூலம் வெளிப்படுத்தினார். தனது மானசீக குருவாக வரித்துக்கொண்ட குருவுக்கே அறப்பணிகளாலும் அரிய வாழ்வாலும் பெருமை சேர்த்தவர் அப்பூதி அடிகள்.

காண்க:
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக