நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

1.3.11

நேர்மையின் மறு உருவம்


மொரார்ஜி தேசாய்

பிறப்பு: பிப். 29


இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் மொரார்ஜி தேசாய். இவரும் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்; நேரு, இந்திரா அமைச்சரவைகளில் அமைச்சராக பணியாற்றியவர்.  நேர்மையின் வடிவமாக நெறி தவறாத பொதுவாழ்வை ஒரு தவம் போல் நடத்தியவர் மொரார்ஜி தேசாய். நாட்டின் உயர அதிகாரபீடத்தை அலங்கரித்தபோதும்  எளிய வாழ்வு வாழ்ந்த பெருந்தகை. அவரது வாழ்வில் நடந்த தவிர்த்திருக்கக் கூடிய - மொரார்ஜியின் நேர்மைக்கு உரைகல்லான -  இரு நிகழ்வுகள்  (நன்றி: ரௌத்ரம் பழகு) இதோ...

பிரிக்கப்படாத பழைய பம்பாய் மாநிலத்தின் முதல்வராக தேசாய் இருந்த போது, அவருடைய அன்பு மகள் இந்து, மருத்துவக் கல்லூரியில் இறுதித் தேர்வு எழுதி முடித்தாள். முதல் வகுப்பில் தேர்ச்சி பெறும் தகுதி மிக்க இந்து, தேர்வில் தவறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை மறுத்த சக மாணவிகள் இந்துவை தேர்வுத் தாளின் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்படி வற்புறுத்தினர். ஆனால், தேசாய் அதை அனுமதிக்கவிலை.

'மறுமதிப்பீடு செய்து, தாளைத் திருத்திய ஆசிரியரின் தவறு கண்டுபிடிக்கப்பட்டு, உரிய மதிப்பெண்களைப் பெற்று.. உன் தகுதி காரணமாகவே நீ தேர்ச்சி அடைந்தாலும், முதல்வராக உள்ள நான் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக சமூகம் அர்த்தப்படுத்திப் பழிதூற்றும். இந்த முயற்சியைக் கைவிட்டு அடுத்து வரும் தேர்வுக்கு உன்னை ஆயத்தம் செய்வது தான் சரியானது என்று தேசாய் சொன்னதும், மனமுடைந்த இந்து தற்கொலை செய்து கொண்டார். கீதையின் பாதையில் வாழ்க்கையை வகுத்துக் கொண்ட மொரார்ஜி மகளின் இழப்பை மெளனமாகத் தாங்கிக் கொண்டார்.

பொதுவாழ்வில் தூய்மை என்பதற்கு தனது மகளை பலிகொடுத்து முன்னுதாரனததை ஏற்படுத்தியவர் மொரார்ஜி தேசாய். இப்போதைய அரசியல் வாதிகளை சற்றே எண்ணிப் பாருங்கள்.

குஜராத் மாநிலத்தை உள்ளடக்கிய பம்பாய் மாகாணத்தின் முதல்வராகவும், இந்தியாவின் நிதி மந்திரியாகவும், பிரதமராகவும் பணியாற்றிய மொரார்ஜி, தன் நெடிய வாழ்வின் இறுதி நாட்களில் பலர் வாழும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வாடகை வீட்டில் வசித்தார். வீட்டின் உரிமையாளர் தொடுத்த வழக்கில் நீதி மன்றம் தேசாயின் குடும்பம் வெளியேற வேண்டும் என்று தீர்ப்புரைத்தது.

அதிர்ச்சியிலும் அவமானத்திலும் உறைந்து போன மொரார்ஜியின் மருமகள் மனநிலை பாதிக்கப்பட்டு மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இந்திய பிரதமராக இருந்தவர்க்கு சொந்த வீடில்லை என்பது இதிகாசச் செய்தி அன்று.  நம் கண்முன்னே கண்ட நிஜம்.

ஆனால், தமிழ்நாட்டு மேடைகளில் 'மொரார்ஜிமில்' தேசாய்க்குச் சொந்தம் என்று பொய்யைக் கடை விரித்தவர்கள், இன்று ஆலை அதிபர்களாக, சோலை மிராசுகளாக சொர்க்க வாழ்வு வாழ்கின்றனர்.  என்ன நண்பர்களே! அதிர்ச்சியாக இருக்கின்றதா? நம்பவே முடியவில்லையா? ஆனால் இது தான் நிஜம்.

தியாக  வாழ்க்கை:

மொரார்ஜி தேசாய், பம்பாய் மாகாணத்தை சேர்ந்த படெலி என்னும் ஊரில், 1896, பிப். 29  ல்  பிறந்தார். இது தற்போது குஜராத்தில் உள்ளது. மும்பையை சேர்ந்த வில்சன் கல்லூரியில் படிப்பை முடிந்தவுடன் குஜராத்தில் குடிமுறை அரசுப்பணியில் (civil service) இணைந்தார். பின்பு அப்பணியை விட்டு விலகி ஆங்கில அரசுக்கு எதிராக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டுகளை சிறையில் கழித்தார்.

இவர் சிறந்த கொள்கை பிடிப்புள்ளவராகவும் தலைமை பண்பு உள்ளவராகவும் இருந்ததால் விடுதலைப்போராட்ட வீரர்களிடமும் குஜராத் பகுதி காங்கிரஸ் கட்சியினர் இடையேயும் செல்வாக்கு பெற்ற தலைவராக விளங்கினார். 1934 மற்றும் 1937 ல் நடந்த பாம்பே மாகாண தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவாய் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நேருவின் அமைச்சரவையிலும் (1959- 1964) இந்திராவின் அமைச்சரவையிலும் (1967- 1970) நிதி அமைச்சராக பணியாற்றிய மொரார்ஜி, இந்திராவுடனான கருத்து வேறுபாட்டால் பதவி விலகினார். காங்கிரஸ் கட்சிக்குள் செயல்பட்டுவந்த ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களுள் முக்கியமானவராக இருந்தார்.

1975  ல் தனது பதவிக்கு வந்த ஆபத்தைத் தடுக்க இந்திரா காந்தி ஏவிய நெருக்கடி நிலையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, சர்வோதயத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் போராடின. அப்போது மொரார்ஜி சிறையில் அடைக்கப்பட்டார். ஆயினும் அடுத்து நடந்த நாடாளுமன்றத்  தேர்தலில் ஜனதா என்ற பெயரில் போட்டியிட்ட கட்சிகள் வென்றன.

ஜனதா அரசில் பிரதமரானார் மொரார்ஜி (24.03.1977 -  28.07.1979). மொரார்ஜியின் அமைச்சரவையில் இருந்த அடல் பிகாரி வாஜ்பாய்லால் கிருஷ்ண அத்வானிமது தண்டவதே, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மோகன் தாரியாஜெகஜீவன் ராம்   உள்ளிட்ட அனைவரும் இந்திய அரசியலில் ரத்தினங்களாக ஒளிவீசியவர்கள்.  தனது ஆட்சிக் காலத்தில், நேர்மையான ஆட்சி, பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு, பொருளாதார மறுசீரமைப்பு உள்ளிட்ட பல அறிய நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டினார்.

துரதிர்ஷ்டவசமாக, பதவியாசையால் உந்தப்பட்ட சரண்சிங் உள்ளிட்டவர்களால், ஜனதா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஆயினும் ஜனதா ஆட்சிக் காலம் இந்திய அரசியலில் போனான இடத்தைப் பெற்றுள்ளது. அதன் பிறகு தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிய மொரார்ஜி எளிய வாழ்க்கை வாழ்ந்தார். 1995, ஏப்ரல் 10  ல், தனது 99 வது வயதில் காலமானார்.

அரசியலில் நேர்மைக்கும், பொதுவாழ்வில் தோயமைக்கும் என்றும் உதாரணமாக இருப்பவர் மொரார்ஜி தேசாய். இவர் மட்டுமே நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா'வையும் பாகிஸ்தானின் உயரிய விருதான 'நிசான்-இ-பாகிஸ்தானையும்' பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.


காண்க:





.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக