நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

30.6.11

சுரண்டலை தட்டிக் கேட்ட தலைவர்


தாதாபாய் நௌரோஜி
(மறைவு: ஜூன் 30)

நமது நாடு அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறப் போராடியவர்களுள் மூத்த தலைமுறையைச் சேர்ந்த தலைவர் தாதாபாய் நௌரோஜி. காங்கிரஸ் இயக்கம் பெரும் அரசியல் இயக்கமாக வளர இவரது பங்களிப்பு மகத்தானது. சுதந்திரம் என்ற கருதுகோள் உருப்பெற இவரது சிந்தனைகள் காங்கிரஸ் கட்சிக்குள் செயலூக்கம் அளித்தன. அடிமைப்பட்ட இந்தியாவில் ஆங்கிலேயரின் சுரண்டலுக்கு எதிராக கூர்மையான வாதங்களை முன்வைத்த முதற்பெரும் தலைவர் இவரே.

தாதாபாய் நௌரோஜி (செப். 4, 1825  ஜூன் 30, 1917) குறித்து  தமிழகத்தின் மகாகவி பாரதியார், பாடல் எழுதி இருக்கிறார்.  காங்கிரஸ்  இயக்க  நிறுவனர்களுள் இவர் தலையாயவர். காங்கிரசுக்குள் இரு  பிரிவுகளாக    இருந்த தலைவர்களை ஒன்றுபடுத்தும்  விசையாக  தாதாபாய் திகழ்ந்தார்.

 1825, செப். 4 ம் தேதி பம்பாயில் (தற்போதைய மும்பை) ஒரு பார்ஸி குடும்பத்தில் நவ்ரோஜி பிறந்தார்.  அவருக்கு 4 வயதாக இருந்த போது தந்தை பலன்ஜி தோர்டி உயிரிழந்து விட்டாலும், தாதாபாய் நவ்ரோஜிக்கு தரமான கல்வி வழங்கத் தேவையான அனைத்தையும் அவரது தாய் மானெக்பாய் செய்து கொடுத்தார்.

பம்பாயில் உள்ள எல்ஃபின்ஸ்டோன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த நவ்ரோஜி, ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் அதே கல்லூரியில் கணிதம், தத்துவப் பாடத்திற்கு பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.  கடந்த 1852இல் தனது அரசியல் பயணத்தை துவக்கிய நவ்ரோஜி, ஆங்கிலேயர்களின் ஆட்சி முறையை தீவிரமாக எதிர்த்ததுடன், அதனை கடுமையாக விமர்சித்து அப்போதைய ஆங்கிலேய வைஸ்ராய், கவர்னர்களுக்கு கடிதம் எழுதினார்.

இந்தக் கடிதங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததற்குக் காரணம் இந்திய மக்களின் அறியாமையே என்பதை உணர்ந்த தாதாபாய், மக்களுக்கு கல்வியறிவு வழங்கவும், விடுதலை வேட்கையை எழுப்பவும் 'கியான் பிரசார்க் மண்டல்' என்ற அமைப்பை உருவாக்கினார்.


1855ல் இங்கிலாந்திற்கு சென்ற தாதாபாய், அங்கு முதல் இந்திய வர்த்தக அமைப்பை 1859ல் துவக்கினார். இங்கிலாந்தில் வசித்த காலத்தில் அந்நாட்டு மக்களிடையே இந்திய மக்களின் துன்பகரமான நிலையை தனது பேச்சுகள், கட்டுரைகள் மூலம் தாதாபாய் விளக்கினார். 

இதன் பின்னர் தாயகம் திரும்பிய தாதாபாய், இந்தியாவின் வள ஆதாரங்களையும், வரிவிதிப்பு,கடன் போன்ற முக்கிய நிதியியல் ஆதாரங்களையும் புள்ளியியல் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார். கடந்த 1870ம் ஆண்டில் இந்தியாவில் தனிநபர் வருமானம் ரூ. 20 மட்டுமே என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

இந்தியாவிற்குள் இருவிதமான பொருளாதார அமைப்புகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்ட தாதாபாய்,  ஆங்கிலேயே ஆட்சியாளர்கள்,  ராணுவத்தினர்,  முதலாளிகள், வணிகர்கள் ஆகியோர் இந்தியர்களின் மூலதனம்,  ஊதிய வருமானம்,  வரி வருவாய்,  லாபம்,  வட்டி, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று குவிக்கிறார்கள் என்றும் குற்றம் சாற்றினார்.

அதே தருணத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தின் மற்றொரு பிரிவில் ஏழைகள், விவசாயிகள் என்று சுரண்டப்பட்ட பெரும்பான்மை மக்கள் பெரும் துன்பத்திலும், வறுமையிலும் வாழ்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். தாதாபாய் நவ்ரோஜியின் ‘பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும்,  இந்தியாவின்  வறுமையும்’ (Poverty and Un-British Rule in India) என்ற நூல் ஆங்கிலேயர் அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது.


தாதாபாய் நவ்ரோஜியின் நடவடிக்கைகளால் ஆங்கிலேய அதிகாரிகள் ஆத்திரமடைந்தாலும், சூழ்நிலை கருதி அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். 'சுயராஜ்ஜியம்' என்ற கொள்கையை முதல்முதலில் கையில் எடுத்த பெருமையும் தாதாபாய் நவ்ரோஜியையே  சேரும்.

பெருந்தலைவராகப் போற்றப்பட்ட மகாத்மா காந்தி உட்பட முன்னணி இந்தியத் தலைவர்கள் பலர் தாதாபாய் நௌரோஜியை தங்களுக்கு வழிகாட்டியாக குறிப்பிட்டுள்ளனர். காரணம், தாதாபாய் நௌரோஜியின் பொருளாதாரக் கருத்துகள் இன்றளவும் எண்ணிப் போற்றுகின்ற அளவிற்கு மிகவும் ஆழமான, அறிவு செறிந்த அணுகுமுறைகளைக் கொண்ட கருத்துகளாகும்.


1886, 1893, 1906 ஆகிய காலக் கட்டங்களில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தாதாபாய் செயல்பட்டார். 1892 முதல் 1895  வரை ஐக்கிய ராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

'ஒன்றாக இருந்து சுயாட்சி பெற்று அதனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே வறுமையிலும், பஞ்சத்திலும் உழன்று கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இந்திய மக்களை காப்பாற்ற முடியும். அப்போதுதான் பண்டைய காலத்தில் இருந்தது போல் உலகின் மிக உயரிய, பண்பட்ட நாடாக இந்தியா உருப்பெறும்' என, தாதாபாய் நவ்ரோஜி குறிப்பிட்டார். 

அவரது நினைவுநாளான இன்று அவர் நினைவைப்  போற்றுவோம்.  இன்றைய  ஊழல்மயமான   அரசியலில் இருந்து நாடு விடுபட  நாமும்  செயலூக்கம்  பெறுவோம்.


காண்க:

தாதாபாய் நௌரோஜி (விக்கி)

26.6.11

தேசியம் காத்த தமிழர்


ம.பொ.சிவஞானம்

(பிறப்பு: ஜூன் 26)

தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண்டே தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். தமிழகத்தின் தற்போதைய பல பகுதிகள் நிலைத்திருக்கக் காரணமான ம.பொ.சி, பாரதத்தின் அங்கமே தமிழகம் என்பதை தனது ஆணித்தரமான பேச்சாற்றலாலும்,  எழுத்துக்களாலும், இலக்கிய அறிவாலும் நிரூபித்தவர்.

சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில், பொன்னுசாமி கிராமணியார்- சிவகாமி அம்மாள் தம்பதியாருக்கு  மகவாக 1906, ஜூன் 26 ல் பிறந்தார் சிவஞானம். பிற்காலத்தில் மயிலாப்பூரில் வாழ்ந்தபோது, மயிலாப்பூர்   பொன்னுசாமி சிவஞானம் என்பதே சுருக்கமாக ம.பொ.சி. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பிரபலமான பெயராயிற்று.

மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த சிவஞானம், மூன்றாம் வகுப்போடு பள்ளிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிவந்தது. குலத் தொழிலான நெசவுத்  தொழிலில் குழந்தையாக இருந்தபோதே ஈடுபட்ட அவர், பிற்பாடு  அச்சுக்  கோர்க்கும் தொழில் ஈடுபட்டார். டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவின் 'தமிழ்நாடு' பத்திரிகையில் தான் அவரது அச்சுப்பணி (1927-1934) துவங்கியது. அதுவே அவரது இலக்கிய தாகத்திற்கும்,  தேசிய  வேகத்திற்கும்  ஊற்றாக அமைந்தது.

31  வயதில் திருமணம் நடந்தது; ஒரு மகன், இரு மகள்கள் பிறந்த நிலையில்,  நாட்டு விடுதலைப் போரில்  சிவஞானமும் ஈர்க்கப்பட்டார். அவரது அரசியல் ஈடுபாடு காங்கிரசில் அவரைச் சேர்த்தது. மகாத்மா காந்தியின் ஹரிஜன முன்னேற்றப் பணிகளில் ம.பொ.சி. இணைந்தார். சென்னை ஹரிஜன சேவா சங்கத்தின் பிரசாரகராகவும் செயலாளராகவும் (1934) பணியாற்றிய ம.பொ.சி, சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணை செயலாளர் ஆனார் (1936). 1947 ல் அதன் செயலாளராக உயர்ந்தார். 1928  முதல் 1947  வரை, பல முறை விடுதலைப்போராட்டங்களில் பங்கேற்ற ம.பொ.சி, ஆறு முறை  சிறைவாசம் அனுபவித்தார்.

700  நாட்களுக்கு மேல் சிறையில் இருந்துள்ள ம.பொ.சி, தனது சிறைக்காலத்தை  தமிழின் முதல்பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்தைக் கற்பதில் செலவிட்டார். அந்த அனுபவமே 'சிலம்புச்செல்வர்' என்ற பட்டப்பெயர் கிடைக்கும் வகையில் அவரை உயர்த்தியது. இந்தப் பட்டத்தை  ம.பொ.சி.க்கு வழங்கியவர்  சொல்லின் செல்வர் ரா.பி.சேது பிள்ளை!  சிலப்பதிகாரத்தைக் கொண்டே,  தனித்தமிழ்நாடு கோரிய பிரிவினைவாதிகளை தனது அறிவுத்திறமான வாதத்தால் முடக்கியவர் ம.பொ.சி.

தேசிய இயக்கமான காங்கிரசில் இருந்தபோதும், தமிழகத்தின் உயர்வே ம.பொ.சி.க்கு நோக்கமாக இருந்தது. இது தனது மொழி மீதான பற்றின் காரணமாக விளைந்தது. அதன் காரணமாக 1946  ல் 'தமிழரசுக் கழகம்' என்ற அமைப்பை நிறுவினார். அதன் வாயிலாக, மொழியின் அடிப்படையில் தமிழகம் தனி மாநிலமாக வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். அப்போது தென் மாநிலங்கள் இணைந்து சென்னை மாகாணமாக  இருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது எல்லைப் பிரச்னைகள் ஏற்பட்டன. அப்போது திருப்பதியை தமிழகத்தில் இணைக்கப் போராடிய ம.பொ.சி.க்கு வெற்றி கிடைக்கவில்லை; ஆயினும் திருத்தணி தமிழகத்தில் சேர அவரது போராட்டம் வழி வகுத்தது. திருப்பதி ஆந்திராவில் இணைந்தது. அதேபோல, குமரி மாவட்டம், பீர்மேடு, செங்கோட்டை, தேவிகுளம் பகுதிகள் கேரளாவில் சேராமல் தமிழகத்தில் இணைய பாடுபட்டார். கவிமணி தேசிக விநாயகம்  பிள்ளை, நேசமணி, டி.வி.ராம சுப்பையர், தாணுலிங்க நாடார் ஆகியோருடன் இணைந்து அதற்காக குரல் கொடுத்தார்.  இப்போராட்டத்தால் குமரி மாவட்டத்தையும் செங்கோட்டை பகுதிகளையும் மட்டுமே பெற முடிந்தது. ஆயினும் ம.பொ.சி.யின் போராட்டம் காரணமாக தமிழ் பேசும் பல பகுதிகள் தமிழகத்திற்கே கிடைத்தன.

தவிர, சென்னை நகருக்கு ஆந்திரா தலைவர்கள் உரிமை கொண்டாடிய போது,  'தலையைக்  கொடுத்தேனும் தலைநகரைக்  காப்போம்' என்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் செய்யவைத்து, சென்னை தமிழக  தலைநகராகத்  தொடரக் காரணமானார்.  புதிய மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என பெயர்சூட்ட வேண்டும் என்றும்  ம.பொ.சி. வலியுறுத்தி போராடினார். இந்தக் கோரிக்கை 1969 ல், தியாகி சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகத்தால் நிறைவேறியது.

இடைக்காலத்தில் கட்சிக்குள் ஏற்பட்ட வேறுபாட்டால், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் (1954) ம.பொ.சி. ஆயினும் தனது தமிழரசுக் கழகம் மூலமாக அரசியல் பணிகளைத் தொடர்ந்தார். அக்காலத்தில் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய திராவிடர் கழகம் உமிழ்ந்த வெறுப்பூட்டும் தேசவிரோத, சமயவிரோத பிரசாரங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

காங்கிரஸ் ஆட்சியை இழந்து  திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், தேசிய ஒருமைப்பாட்டிற்கான ம.பொ.சி.யின் குரல் ஓங்கி ஒலித்தது. தனது வாழ்வின் இறுதிவரை, தமிழ் மொழி  தேசியத்தின் ஓர் அங்கமே என்று அவர் முழங்கி வந்தார். மாநிலங்கள் தேசிய உணர்வுடன் வலிமையாக தேசமாகப் பிணைந்திருக்க மாநில சுயஆட்சி வழங்கப்பட வேண்டும் என்று ம.பொ.சி. குரல் கொடுத்து வந்தார்.

சிறந்த மேடைப் பேச்சாளரான ம.பொ.சி. சிலப்பதிகாரம் குறித்து மணிக் கணக்கில் பேச வல்லவர். பேச்சாளராக மட்டுமல்லாது சிறந்த  எழுத்தாளராகவும்  அவர் விளங்கினார். தவிர தேர்ந்த பத்திரிகையாளராகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார். மாதமிருமுறை இதழான 'கிராமணி குலம்' (1934-1937),  தமிழக எழுத்தாளர் சங்கத்தின் மாத இதழான 'பாரதி' (1955-1956), 'தமிழ் முரசு' (1946-1951), 'தமிழன் குரல்' (1954-1955), வார இதழான 'செங்கோல்' (1950-1995) ஆகிய பத்திகைகளின் ஆசிரியராக திறம்பட இயங்கிய ம.பொ.சி, அவற்றில் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும் மதிப்பற்றவை.

அவரது எழுத்துகள்  பல நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தவிர தனியே பல நூல்களையும் ம.பொ.சி. எழுதியுள்ளார். 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்ற அவரது நூல், சாஹித்ய அகாதமி விருது (1966) பெற்றது. வ.உ.சி,  கட்டபொம்மன்,  பாரதி,  சிங்காரவேலர்   போன்றவர்களது  வாழ்க்கை வரலாறுகளை   எழுதியுள்ள ம.பொ.சி,  'விடுதலைப்போரில் தமிழகம்' , 'விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு', 'எனது போராட்டம்' ஆகிய நூல்களின் வாயிலாக விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பை அரிய ஆவணமாகப் பதிவு செய்தார். தனது வாழ்நாளில் 140 க்கு மேற்பட்ட நூல்களை ம.பொ.சி. எழுதினார்.

- இவ்வாறு இலக்கிய உலகிலும் எழுத்துலகிலும் முத்திரை பதித்த ம.பொ.சி,  கல்விப்பணிகளிலும் சமூகப் பணிகளிலும், தொழிலாளர் சங்கப் பணிகளிலும்  இடையறாத   ஆர்வத்துடன் ஈடுபட்டார். சென்னை, மதுரை, தஞ்சை, சிதம்பரம் பல்கலைக்கழகங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்த ம.பொ.சி, நூலக ஆணைக்குழுவுக்கென தமிழகத்தில் தனித்துறை நிறுவவும் காரணமானார்.

இத்தனைக்கும் அவர் படித்தது மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே. தனது தொடர்ச்சியான இலக்கிய நாட்டத்தாலும், பட்டறிவாலும், தன்னைத் தானே பட்டை தீட்டிக்கொண்ட ம.பொ.சி, தனது அனுபவங்கள் எதிர்கால தலைமுறையும் பெற வேண்டியே அற்புதமான நூல்களை ஆக்கித் தந்துள்ளார். அவரது பல நூல்கள் பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

தமிழிசையைப்  பரப்புவதிலும் ம.பொ.சி. முன்னின்றார்; 1982 -83 ல் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழாவை விழாக்குழுத் தலைமையேற்று திறம்பட நடத்தினார். சென்னை மாநகராட்சியின் மாநகரத் தந்தை (1948-1955), சட்ட மேலவை உறுப்பினர் (1952-1954 மற்றும் 1978-1986), சட்டமன்ற உறுப்பினர் (1972-1978) ஆகிய பதவிகளில் மக்கள் பிரதிநிதியாகவும் ம.பொ.சி. விளங்கினார். தமிழக சட்ட மேலவையின் தலைவராக (1978-1986) ம.பொ.சி. இருந்த காலகட்டம், மேலவையின் பொன்னான காலம் என்று போற்றப்படுகிறது. 1986 ல் மேலவை அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரனால் கலைக்கப்பட்டது.

தனது வாழ்வின் இறுதிக்காலகட்டத்தில், அரசியல்ரீதியாக துறவு மேற்கொண்ட ம.பொ.சி, 1995, அக்டோபர் 3 ல் மண்ணுலகை நீத்தார்.

பாரதத்தின் அடித்தள ஒற்றுமையில் தமிழின் பங்களிப்பையும் தமிழர்களின் ஒத்துழைப்பையும் பதிவு செய்ததே ம.பொ.சி.யின் மகத்தான சாதனை. தமிழும் தேசியமும் தனது இரு கண்கள் என்று வாழ்ந்து மறைந்த அன்னாரின் பிறந்த நாளான இன்று அவரது அமரத்துவமான வாழ்வை நினைவுகூர்வோம்.

- குழலேந்தி

காண்க:

சிலம்புச்செல்வர் ம.பொ.சி.

ம.பொ.சிவஞானம் (விக்கி)

MA.PO.SI

இலக்கியத்தின் எதிரிகள்- ம.பொ.சி. கட்டுரை (ஈகரை)

சென்னை மீட்ட வரலாறு - பரமேஸ்வரி

ம.பொ.சி.யின் ஈழம் குறித்த கருத்து (கூட்டாஞ்சோறு)

ம.பொ.சி.யின் நூல்கள் (கீற்று)

..
.பொ.சி. படைத்த நூல்கள்:
தன் வரலாறு
1. எனது போராட்டம் 1974
சிறுகதை
வைகுந்தம் பிறந்தது (சிறுகதைத் தொகுப்பு) - 1980
பயண நூல்கள்
1. மலேசியாவில் ஒரு மாதம் - 1965
2. மாஸ்கோவிலிருந்து லண்டன் வரை - 1972
3. மொரிசியஸ் தீவில் ஒரு வாரம் - 1987
4. அமெரிக்காவில் மூன்று வாரம் - 1987
வாழ்க்கை வரலாறுகள்
1. கப்பலோட்டிய தமிழன் - 1944
2. வீரபாண்டிய கட்டபொம்மன் - 1949
3. கயத்தாற்றில் கட்டபொம்மன் - 1950
4. தளபதி சிதம்பரனார் 1950
5. சுதந்திர வீரன் கட்டபொம்மன் - 1950
6. கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவானபதிப்பு) - 1972
7. தோழர் சிங்காரவேலர் வீர வாழ்க்கை - 1985
8. நாடகப் பேராசிரியர் - சதாவதானி கிருஷ்ணசாமிப் பாவலர் வாழ்க்கை வரலாறு - 1988
9. முப்பெரும் ஞானியர் - 1989
வள்ளலார் பற்றிய நூல்கள்
1. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - 1963
2. வள்ளலாரும் பாரதியும் - 1965
3. வள்ளலார் வளர்த்த தமிழ் - 1966
4. வள்ளலார் வகுத்த வழி - 1970
5. வள்ளலார் கண்ட சாகாக் கலை - 1970
6. வானொலியில் வள்ளலார் - 1976
7. வள்ளலாரும் காந்தியடிகளும் - 1977
8. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) - 1978
பாரதியார் பற்றிய நூல்கள்
1. எங்கள் கவி பாரதி - 1953
2. பாரதியாரும் ஆங்கிலமும் - 1961
3. பாரதி கண்ட ஒருமைப்பாடு - 1962
4. உலக மகாகவி பாரதி - 1966
5. பாரதியார் பாதையிலே - 1974
6. பாரதியார் போர்க்குரல் - 1979
7. பாரதியார் பற்றிய ம.பொ.சி. பேருரை - 1983
காந்தியடிகள் பற்றிய நூல்கள்
1. தமிழர் கண்ட காந்தி - 1949
2. காந்தியடிகளும் ஆங்கிலமும் - 1961
3. காந்தியடிகளும் சோசலிசமும் - 1971
4. மகாத்மாவும் மதுவிலக்கும் - 1979
5. காந்தியடிகளைச் சந்தித்தேன் - 1979
6. பயங்கரவாதமும் காந்திய சகாப்தமும் - 1994
திருவள்ளுவர் பற்றிய நூல்கள்
1. வள்ளுவர் வகுத்த வழி - 1952
2. திருவள்ளுவரும் கார்ல்மார்க்சும் - 1960
கம்பர் பற்றிய நூல்கள்
1. கம்பர் கவியின்பம் - 1966
2. கம்பரிடம் யான் கற்ற அரசியல் - 1979
3. கம்பரும் காந்தியடிகளும் - 1981
4. கம்பரின் சமயக் கொள்கை - 1983
சிலப்பதிகாரம் பற்றிய நூல்கள்
1. சிலப்பதிகாரமும் தமிழரும் - 1947
2. கண்ணகி வழிபாடு - 1950
3. இளங்கோவின் சிலம்பு - 1953
4. வீரக்கண்ணகி - 1958
5. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை) - 1961
6. மாதவியின் மாண்பு - 1968
7. கோவலன் குற்றவாளியா? - 1971
8. சிலப்பதிகாரத் திறனாய்வு - 1973
9. சிலப்பதிகார யாத்திரை - 1977
10. சிலப்பதிகார ஆய்வுரை - 1979
11. சிலப்பதிகார உரையாசிரியர்கள் உரை - 1980
12. சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் - 1990
13. சிலம்பில் ஈடுபட்டதெப்படி? - 1994
மாநில சுயாட்சிப் பிரசார நூல்கள்
1. தமிழகத்தில் தமிழரசு - 1946
2. தமிழருக்குச் சுயநிர்ணயம் -1946
3. புதிய தமிழகம் - 1946
4. தமிழரும் பிரிட்டிஷ் திட்டமும் - 1946
5. தமிழரசுக் கழக முதலாவது மாநில மாநாட்டுத் தலைமையுரை - 1947
6. தமிழன் குரல் - 1947
7. சுயாட்சித் தமிழகம் - 1949
8. பிரிவினை வரலாறு - 1950
9. திராவிடத்தாரின் திருவிளையாடல்கள் - 1950
10. திராவிடர் கழகமே, வேங்கடத்திற்கு வெளியே போ - 1951
11. தமிழரசா திராவிடஸ்தானா? - 1952
12. தமிழரசுக் கழக இரண்டாவது மாநில மாநாட்டுத் தலைமை உரை - 1952
13. வடக்கெல்லைப் போர் - 1953
14. முரசு முழங்குகிறது - 1955
15. தி.மு.க.வின் கொள்கை மாற்றம் - 1957
16. சுயாட்சியா, பிரிவினையா? - 1959
17. மொழிச் சிக்கலும் மாநில சுயாட்சியும் - 1968
18. மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு - 1973
19. சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் - 1974
20. புதிய தமிழகம் படைத்த வரலாறு - 1986
மொழிச் சிந்தனைகள் பற்றிய நூல்கள்
1. தமிழும் கலப்படமும் - 1960
2. தமிழா? ஆங்கிலமா? - 1961
3. இன்பத் தமிழா? இந்தி - ஆங்கிலமா? -1963
4. ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு - 1964
5. தமிழை வளர்க்கக் கோரி ஆளுநர்க்கு விண்ணப்பம் - 1976
6. நாடகத் தமிழ் - 1976
7. கல்வி மொழி தமிழா? ஆங்கிலமா? (ம.இரா. இளங்கோவன் தொகுத்தது) - 1981
8. சென்னை பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரை - 1981
9. ஆங்கிலம் வளர்த்த மூட நம்பிக்கை - 1982
10. தமிழும் சமஸ்கிருதமும் - 1984
11. ஆங்கில ஆதிக்கம் அகல பத்துக் கட்டளைகள் –
விடுதலைப் போராட்டம் பற்றிய நூல்கள்
1. சுதந்திரப் போரில் தமிழகம் - 1948
2. முதல் முழக்கம் - 1968
3. விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு - 1970
4. காந்தியடிகளுக்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப் போர் - 1974
5. வந்தேமாதரம் வரலாறு - 1977
6. விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு - 1978
7. சுதந்திரப் போர்க்களம் - 1980
8. விடுதலைப் போரில் தமிழகம் (2 தொகுதிகள்) - 1982
9. இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது - 1986
10. வேதாரணியத்திலிருந்து டில்லி ராஜ்காட்வரை - 1988
இனவழி ஆராய்ச்சி நூல்கள்
1. கலிங்கத்துப் பரணி திறனாய்வு - 1975
2. தமிழகத்தில் பிறமொழியினர் - 1976
3. இலக்கியங்களில் இன வளர்ச்சி - 1978
4. வில்லிபாரதத்தில் தமிழுணர்ச்சி - 1981
5. இலக்கியங்களில் இனவுணர்ச்சி - 1985
பேச்சுக்கலை பற்றிய நூல்கள்
1. பேச்சுக்கலை - 1950
2. மேடைப் பேச்சும் பொதுக்கூட்டமும் - 1951
கட்டுரை நூல்கள்
1. ஏன் வேண்டும் எதிரணி - 1946
2. ஆத்திரப் பொங்கல் - 1947
3. கம்யூனிஸ்டுகள் முடிவை மாற்ற முயல்வார்களா? - 1947
4. வானொலியில் ம.பொ.சி. - 1947
5. மே தினப்புரட்சி - 1949
6. சீர்திருத்தப் போலிகள் - 1950
7. தமிழர் திருநாள் - 1951
8. இலக்கியத்தின் எதிரிகள் - 1953
9. இலக்கியச் செல்வம் - 1955
10. ம.பொ.சி. கூறுகிறார் - 1955
11. பொம்மன் புகழிலும் போட்டியா? - 1956
12. கட்டுரைக் களஞ்சியம் - 1956
13. இன்பத்தமிழகம் - 1956
14. ம.பொ.சி. பேசுகிறார் (பர்மா சொற்பொழிவு) - 1956
15. சிந்தனை அலைகள் - 1964
16. இலக்கியத்தில் சோசலிசம் - 1965
17. தமிழிசை வரலாறு - 1966
18. ஒளவை - யார்? - 1967
19. சான்றோரின் சாதனைகள் - 1970
20. ஆன்ம நேய ஒருமைப்பாடு - 1970
21. திருக்குறளில் கலைபற்றிக் கூறாததேன்? - 1974
22. தமிழிசை வாழ்க - 1978
23. கல்வி நெறிக் காவலர் (திரு.நெ.து. சுந்தர வடிவேலு மணிவிழாச் சொற்பொழிவு) -1974
24. தொல்காப்பியரிலிருந்து பாரதியார் வரை - 1979
25. ஆன்மீகமும் அரசியலும் - 1980
26. நவபாரதத்தை நோக்கி - 1982
27. சிலம்புச் செல்வரின் பல்கலைப் பேருரை -1984
28. இலக்கியங்களில் புத்திர சோகம் - 1986
29. நானறிந்த ராஜாஜி - 1987
30. இராமன் சீதாபிராட்டி வாக்குவாதம் - 1989
31. எனது பார்வையில் நாமக்கல் கவிஞர் - 1989
32. நேருஜி என் ஆசான் - 1989
33. தமிழர் திருமணம் - 1990
34. எனது பார்வையில் பாவேந்தர் - 1991
35. ஈழத் தமிழரும் நானும் - 1992
36. எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு - 1995
37. எழுத்துச் சீர்திருத்தம் - 1995
பதிப்பித்த நூல்
1. ஒளவையார் அருளிச்செய்த கல்வியொழுக்கம்  மூலமும் திரு.ஜே.எஸ். அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பும் - 1980

24.6.11

காவியத்தாயின் இளைய மகன்

கவியரசு கண்ணதாசன்
(பிறப்பு: ஜூன் 24)

முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல் மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகிப்பவர், திரையிசையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்த கவியரசர் கண்ணதாசன்.  

செட்டிநாடு பகுதியில் சிறுகூடல்பட்டியில் 1927, ஜூன் 24 ல் பிறந்த முத்தையா,  பின்னாளில்   கண்ணதாசன் ஆனது சுவாரசியமான கதை. அதை  அவரது 'வனவாசம்'  நூலைப் படித்தால்  உணர  முடியும்.

ஆரம்ப காலத்தில் பகுத்தறிவு என்ற போர்வையில் நடந்த நாத்திக பிரசாரத்தில் மூழ்கிய கண்ணதாசன், அதிலுள்ள ஏமாற்றுவித்தையை உணர்ந்து ஆத்திகப் பாதைக்கு திரும்பினார். ஆரம்ப காலத்து திமுக தலைவர்களுள் ஒருவராக விளங்கிய கண்ணதாசன், அரசியலில் துரோகமும் சுயநலமும் கோலோச்சுவது கண்டு விரக்தியுற்று அதிலிருந்து விலகினார். சில காலம் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த (காண்க: மனவாசம்) அவர் அரசியல் தனக்கு ஒத்துவராது என்று முற்றிலும் விலகினார்.

கண்ணதாசனின் ஆளுமை என்பது, அவரது சாகாவரம் பெற்ற இலக்கியங்களில் தான் நிலைகொண்டுள்ளது. நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்கள், அற்புதமான துள்ளுதமிழ் நடையுடன் கூடிய நூல்கள், கட்டுரைகள், சிறு காப்பியங்கள், நவீனங்களை எழுதியது கண்ணதாசனின் சாதனை. தமிழில் புதிய மறுமலர்ச்சியை பாரதிக்குப் பிறகு ஏற்படுத்தியவர் கண்ணதாசனே.

இவரது 'சேரமான் காதலி' என்ற புதினம் 1980 ல் சாஹித்ய அகாதெமி விருது பெற்றது. 'குழந்தைக்காக' என்ற திரைப்படத்திற்கு எழுதிய  திரைவசனத்திற்காக (1961) இவருக்கு தேசிய விருது கிடைத்தது. திரைப்படல்களிலும் செந்தமிழ் துள்ளி விளையாடுவது கண்ணதாசனின் சிறப்பு. பண்டைய இலக்கியங்களில் அவருக்கு இருந்த தேர்ச்சி திரைப்பாடல்களில் வெளிப்பட்டது. சந்தமும், செந்தமிழும் எந்த சிரமும் இன்றி கைகொரத்தன, கண்ணதாசனின் பாடல்களில். அவர் ஆசுகவியாகவே திகழ்ந்தார்.

அரசியல்வாதி, திரையிசைக் கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் என்ற பன்முகங்களுடன், பத்திரிகையாசிரியராகவும் கண்ணதாசன் விளங்கினார். அவர் நடத்திய சண்டமாருதம், திருமகள், முல்லை, திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல் திரை, கண்ணதாசன் ஆகிய இதழ்கள் தமிழ் இதழ்களின் வரலாற்றில் குறிப்பிடத் தக்கவையாக இன்றும் பேசப்படுகின்றன. குறிப்பாக தென்றலில் அவர் தீட்டிய கூர்மையான அரசியல் நையாண்டியுன கூடிய  உருவக கட்டுரைகள் அக்காலத்தில் பெரும் விழிப்புணர்வையும் பரபரப்பையும் உருவாக்கின.

அவரது அர்த்தமுள்ள இந்து மதம் (பத்து பாகங்கள்), வனவாசம், மாங்கனி, ஏசு காவியம் ஆகியவை கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டிய நூல்களாகும். பகவத் கீதைக்கும் அபிராமி அந்தாதிக்கும்  சௌந்தர்யா லகரிக்கும் (பொன்மழை) கண்ணதாசன் விளக்கம் எழுதி இருக்கிறார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக பெருமைப்படுத்தப்பட்டவர் கண்ணதாசன்.

அமேரிக்கா சென்றிரும்த கவிஞர் உடல்நலக் குறைபாட்டால், சிகாகோவில் 1981, அக்டோபர் 17  ல் மறைந்தார். எனினும் அவர் படைத்த சாகாவரம் பெற்ற நூல்களில் கண்ணதாசன் என்றும் வாழ்வார்.

கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கை கட்டுப்பாடற்றது. மனித பலவீனங்களுக்கு சாட்சியாக விளங்குவது. அதை அவரே தனது சுயசரிதையில் கூறி இருக்கிறார். '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' என்பதே கண்ணதாசனின் சுயபிரகடனம்.

தமிழகத்தில் நாத்திகவாதமும் பிரிவினைவாதமும் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், அதே பிரசாரக் காலத்திலிருந்து விடுபட்டு, தேசியத்தையும் தெய்வீகத்தையும்  உயர்த்திப் பிடித்த குரல் கவிஞர் கண்ணதாசனுடையது. மக்களிடம் வெகுவாகப் புழங்கிய திரையிசைப்பாடல்களில் தனது கருத்துக்களை ஆர்ப்பாட்டமின்றி புகட்டிய கண்ணதாசனின் தேசிய சேவையை குறைத்து மதிப்பிட முடியாது.

-குழலேந்தி

கண்ணதாசனின் நூல்கள்:

 பிரதானமானவை 
  • இயேசு காவியம்
  • அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
  • திரைப்படப் பாடல்கள்
  • மாங்கனி

கவிதை நூல்கள்

  • கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்
  • பாடிக்கொடுத்த மங்களங்கள்
  • கவிதாஞ்சலி
  • தாய்ப்பாவை
  • ஸ்ரீகிருஷ்ண கவசம்
  • அவளுக்கு ஒரு பாடல்
  • சுருதி சேராத ராகங்கள்
  • முற்றுப்பெறாத காவியங்கள்
  • பஜகோவிந்தம்
  • கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்

புதினங்கள்

  • அவள் ஒரு இந்துப் பெண்
  • சிவப்புக்கல் மூக்குத்தி
  • ரத்த புஷ்பங்கள்
  • சுவர்ணா சரஸ்வதி
  • நடந்த கதை
  • மிசா
  • சுருதி சேராத ராகங்கள்
  • முப்பது நாளும் பவுர்ணமி
  • அரங்கமும் அந்தரங்கமும்
  • ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
  • தெய்வத் திருமணங்கள்
  • ஆயிரங்கால் மண்டபம்
  • காதல் கொண்ட தென்னாடு
  • அதைவிட ரகசியம்
  • ஒரு கவிஞனின் கதை
  • சிங்காரி பார்த்த சென்னை
  • வேலங்காட்டியூர் விழா
  • விளக்கு மட்டுமா சிவப்பு
  • வனவாசம்
  • அத்வைத ரகசியம்
  • பிருந்தாவனம்

வாழ்க்கைச்சரிதம்

  • எனது வசந்த காலங்கள்
  • எனது சுயசரிதம்
  • வனவாசம்

கட்டுரைகள்

  • கடைசிப்பக்கம்
  • போய் வருகிறேன்
  • அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
  • நான் பார்த்த அரசியல்
  • எண்ணங்கள்
  • தாயகங்கள்
  • வாழ்க்கை என்னும் சோலையிலே
  • குடும்பசுகம்
  • ஞானாம்பிகா
  • ராகமாலிகா
  • இலக்கியத்தில் காதல்
  • தோட்டத்து மலர்கள்
  • இலக்கிய யுத்தங்கள்
  • போய் வருகிறேன்

நாடகங்கள்

  • அனார்கலி
  • சிவகங்கைச்சீமை
  • ராஜ தண்டனை

காண்க:








.

வீரத்தின் விளைநிலம்


ராணி துர்காவதி
(பலிதானம்: ஜூன் 24)

இந்தியப்  பெண்கள் ஆண்களுக்கு சிறிதும் சளைத்தவர்களல்ல; போர்முனையிலும் கூட சாகசங்களை நிகழ்த்தியவர்கள் என்பதற்கு பல சான்றாதாரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான், கோண்ட்வானா ராணி துர்காவதியின் தீரம் மிகு சரித்திரம்.

ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த, சந்தேல் மன்னர் பரம்பரையில் மன்னர் கீர்த்திராயின்  மகளாக 1524 , அக்டோபர் 5  ல் பிறந்தார் துர்காவதி.

சந்தேல் மன்னர் பரம்பரைக்கு ஆக்கிரமிப்பாளன்  கஜினி முகமதுவை எதிர்த்துப் போரிட்ட பாரம்பரியம் உண்டு. இந்த மன்னர் பரம்பரையில் வந்த வித்யாதர் மன்னர்தான் கஜினியின் கொள்ளைகளை தனது பிராந்தியத்தில் தடுத்து நிறுத்தியவர். உலகப் புகழ் பெற்ற கஜுரேகா கோயிலும், கலஞ்சார் கோட்டையும் இவரால் கட்டப்பட்டவை. அந்தப் பரம்பரையில் வந்த துர்காவதியும் தனது வீர பராக்கிரமத்தால் சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றுவிட்டார். 

கோண்ட்வானா ராஜ்ஜியத்தின் மன்னர் சங்க்ராம் ஷாவின் மைந்தர் தல்பத் ஷாவை 1542  ல் திருமணம் செய்தார் துர்காவதி. இதன்மூலமாக சந்தேல், கோண்ட்வானா ராஜ்ஜியங்களுக்குள் இணக்கமும் பிணைப்பும் ஏற்பட்டன. இந்த ஒற்றுமையின் விளைவாக முஸ்லிம் ஆட்சியாளர் ஷேர்ஷா ஷுரியின் படையெடுப்பை இரு நாட்டுவீரர்களும் இணைந்து எதிர்த்து முறியடித்தனர். அந்தப் போரில் ஷேர்ஷா (1545, மே 22 ) கொல்லப்பட்டார். அதே ஆண்டுதான் ராணி துர்காவதி வீர்நாராயண் என்ற மகனை ஈன்றார்.

வீர்நாராயணனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது (1950) மன்னர் தல்பத்ஷா இறந்தார். எனவே ஆட்சிப்பொறுப்பு முழுவதும் ராணி துர்காவதியின் பொறுப்பில் வந்தது. மகனை முன்னிறுத்தி, ராணி துர்காவதியே கோண்ட்வானா  நாட்டின் அரசியாக ஆட்சி செய்தார்.  

அடுத்துவந்த 14  ஆண்டுகளும் தனது மதியூகமும் நிர்வாகத் திறனும் கொண்டு நாட்டை சிறப்பாக ஆண்டுவந்தார். அவருக்கு திவான் ஆதர் சிம்ம கயஸ்தா உள்ளிட்ட அமைச்சர்கள் உதவி புரிந்தனர். அவர் தனது தலைநகரத்தை   சவ்ரகாரிலிருந்து சாத்புரா மலைத்தொடரில் உள்ள ஷிங்ககாருக்கு   மாற்றினார். இது போர் முக்கியத்துவமும் பாதுகாப்பும் வாய்ந்த முடிவாகும்.

ஷேர்ஷாவின் மறைவுக்குப் பிறகு, மாள்வா பிராந்தியத்தை சுஜத்கான் என்ற முஸ்லிம் தளபதி ஆக்கிரமித்தார். அப்பகுதியை அவரது மகன்  பாஜ் பகதூர் (1556) ஆண்டுவந்தார். ராணி துர்காவதி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அவரது ராஜ்ஜியத்தை பாஜ் பகதூர் தாக்கினார். ஆனால் அப்போரில் அவர் படுதோல்வியுற்றார். இதனால் ராணி துர்காவதியின் புகழ் நாடு  முழுவதும் பரவியது. 

1562  ல் மாள்வா ராஜ்யத்தை முகலாயப் பேரரசர் அக்பர் ஆக்கிரமித்தார். அப்போது ராணி துர்காவதியின் நாட்டின் செல்வச் செழிப்பு குறித்து கேள்வியுற்ற அக்பர் அதனையும் ஆக்கிரமிக்க விரும்பினார். தனது தளபதி குவாஜா அப்துல் மஜீத் ஆசப்கானை கோண்ட்வானா மீது படையெடுக்குமாறு பணித்தார்.

முகலாயப் பேரரசின் படைபலத்தை விளக்கிய திவான், அக்பருடன் சமாதானமாகப்  போவதே நல்லது என்று ராணிக்கு  அறிவுரை  கூறினார்.   ஆனால், ''அவமானப்பட்டு உயிர் வாழ்வதைவிட, மரியாதைக்குரிய விதமாக தன்மானத்துடன் சாகவே விரும்புகிறேன்'' என்று முழங்கினார் ராணி துர்காவதி;  தனது படைகளை போருக்கு ஆயத்தப்படுத்தினார்.

நாராய் என்ற பகுதியில் இரு தரப்புக்கும் இடையே பெரும் போர் நடந்தது. இருதரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆயினும் முதல்நாள் போரில் ராணி துர்காவதியின் கரமே ஓங்கியது. எனினும் ராணியின் தளபதி அர்ஜுன்தாஸ் போரில் கொல்லப்பட்டார். எனவே துர்காவதியே போருக்கு தலைமை ஏற்றார்.

மறுநாள் போருக்கு முன்னதாக, இரவே முஸ்லிம் படைகளை தாக்க வேண்டும் என்று ராணி துர்காவதி கூறினார். ஆனால், அது போர் தர்மமல்ல என்று அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிநவீன ஆயுதங்களுடன் நன்கு பயிற்சி அளிக்கப்பட படையுடன் உள்ள முகலாயப் படையை நேருக்கு நேர் மோதுவதை விட மறைமுகமாகத் தாக்குவதே நல்லது என்று ராணி கருதினார். ஆயினும் அமைச்சர்கள் ஆலோசனைப்படி இரவுத் தாக்குதலைக் கைவிட்டார்.

மறுநாள் தில்லியிலிருந்து  வந்த பெரும் பீரங்கிப்படையுடன் ஆசப்கான் போர்முனைக்கு வந்தார். யானை மீதேறி ராணி துர்காவதியும் மைந்தர் வீர் நாராயணும் போர்முனைக்கு வந்தனர். இந்தப் போரில், பீரங்கி முன் தாக்குப்பிடிக்க முடியாமல் கோண்ட்வானா  வீரர்கள் பெருமளவில் பலியாகினர். வீர் நாரயணும் படுகாயமுற்று போர்க்களத்திலிருந்து விலகினார். ஆயினும் ராணி துர்காவதி சளைக்காமல் போரில் ஈடுபட்டார்.

அப்போது எதிரிப்படையினரின்  அம்புகள் ராணி துர்காவதியின் கழுத்தை துளைத்தன. அவரது தோல்வி உறுதியாகிவிட்டது. அவரும் நினைவிழந்தார். அப்போது, போர்க்களத்திலிருந்து வெளியேறிவிடலாம் என்று மாவுத்தன் அறிவுறுத்தினான். ஆனால், துர்காவதி அதனை ஏற்கவில்லை. ''படுதோல்வியுற்று எதிரியின்  கரத்தில் சிக்குவதை விட, உயிரை மாய்த்துக் கொள்வதே சிறப்பானது'' என்று கூறிய ராணி துர்காவதி, தனது குறுவாளால் மார்பில் குத்திக்கொண்டு போர்க்களத்திலேயே (1564, ஜூன் 24) உயிர்நீத்தார்.

ராணி துர்காவதியின் வீரமரணம் முகலாயப் பேரரசர் அக்பரையே நிலைகுலையச் செய்தது. அவரது ஆக்கிரமிப்புத் திட்டங்கள் பலவற்றை ராணியின் வீர மரணம் மறுசிந்தனைக்கு உள்ளாகியது.

ராணி துர்காவதியின் தீரம் இன்றும் பழங்கதைப் பாடல்களில் புகழப்படுகிறது. அவரது வீரம் இந்தியப் பெண்களின் வீரத்திற்கான மறைக்க முடியாத  சான்றாக  விளங்குகிறது.

-குழலேந்தி

காண்க:







21.6.11

ஆண்மைக்கு அறைகூவல்

''நாம் சக்திசாலிகளாக இருந்திருந்தால் நம்மீது படையெடுக்கும் அளவிற்கு  யாருக்காவது துணிச்சல் இருந்திருக்குமா?  அல்லது நம்மை வேறு எந்த வகையிலாவது அவமானப்படுத்தி இருப்பார்களா?

பின் ஏன் மற்றவர்களைக் குற்றம் சொல்ல வேண்டும்? குற்றம் நம்முடையதுதான் என்றால் அதனை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நமது பலவீனங்களையும் குறைகளையும் போக்கிக்கொள்ள முயல வேண்டும்.

நாம் பலவீனமாக இருக்கும் வரையில் நம் மீது ஆக்கிரமிப்பு செய்ய பலசாலிகளுக்கு நப்பாசை இருந்து கொண்டுதானிருக்கும். இது இயல்பானதே. பலசாலிகளைத் திட்டுவதாலோ,  அவர்களை நிந்திப்பதாலோ, பயன் என்ன? இப்படிச் செய்வதால் நிலைமை மாறிவிடாது.

தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக நம்மீது அந்நிய ஆக்கிரமிப்புகள் ஏன் நடைபெற்று வருகின்றன? நாம் பலவீனர்களாக, நடைபிணங்களாக உலவுகிறோம் என்பதால்தானே? நாம் படுகிற துன்பங்களின் வேர் நமது சக்தியற்ற தன்மைதான். அதை முதலில் பறித்து எறிய வேண்டும்.

''ஜீவோ ஜீவஸ்ய ஜீவனம்''  என்பது இயற்கையின் நியதி. அதாவது எப்போதுமே பலவீனமானவர்கள் பலவான்களுக்கு இரையாகிறார்கள். உலகில் பலமற்றவர்கள் மதிப்புடன் வாழ முடியாது. அவர்கள் பலமுள்ளவர்களின் அடிமையாகத் தான் உயிர் வாழ வேண்டியுள்ளது. எப்போதும் அவமானமும், சகிக்க முடியாத இன்னல்களும் தான் அவர்களது தலையெழுத்து.

நமது வீழ்ச்சிக்கு ஆணிவேர் நமது மனதிலுள்ள பலவீனம். அதனை முதலில் போக்குவோம்....

நீங்கள்  உங்களது   தன்னலத்தையும்  செயலற்றிருக்கும்  மனப்பான்மையையும்   வேரோடு  களைந்தெறியுங்கள்   என  நான்   உங்களை வேண்டிக்   கேட்டுக்கொள்கிறேன்.  சமூகசேவைப் பணிகளைப்  புறக்கணித்ததால்  நமது மனம்  மிகவும்  பலவீனம்  அடைந்துள்ளது.   ''சமுதாயம்   எக்கேடு கேட்டால் என்ன,   எனது சுயநலம் பாதிக்கப்படாமல் இருந்தால் சரி''   என்பது போன்ற  சமுதாயம்  பற்றிய எண்ணம் நமக்குள் நிரம்பியுள்ளது.  இதனால் நமது  சமுதாயம்  இன்று பலமற்றதாகிவிட்டது...

நாம் இதே போல தன்னலத்தில் மூழ்கி, பலவீனமாகவும், சமுதாய நலனைப் புறக்கணிப்பவர்களாகவும் இருக்கும் வரை, நாம் நல்லவர்களாக மாறாத வரை, நம்மைத் தீயவரெனக் கருதி பகவான் நமது அழிவுக்கே துணை நிற்பார். நாம் உணமியிலேயே நல்லவர்கள் ஆகும்போது, அதாவது, தேசம், தர்மம், சமுதாயம் இவற்றின் நலனுக்காக நமது அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாராகும்போதுதான் கடவுள் நமக்கு உதவுவார்...''

- டாக்டர் ஹெட்கேவார்
(ஆதாரம்: வழிக்குத் துணை)

இன்று அன்னாரது நினைவுநாள்

காண்க:


..

18.6.11

தியாகத் திருவிளக்கு

பி.கக்கன்

(பிறப்பு: ஜூன் 18) 

ஒரு மக்கள் பிரதிநிதி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் பி.கக்கன். தாழ்த்தப்பட்ட  சமுதாயத்தில் பிறந்த கக்கன், அக்காலத்தில் நிலவிய தீண்டாமையை தனது தனித்த ஆளுமையால் வென்றவர். நாடாளுமன்ற உறுப்பினர், சட்டசபை உறுப்பினர், அமைச்சர், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிகள் அவரைத் தேடி வந்தன. ஆயினும் அவரது பொதுவாழ்க்கை மிகவும் எளிமையானதாக இருந்தது.  பொதுவாழ்வில் உச்சத்தில் இருந்தபோதும், தனக்கென  எந்த சொத்தும்   சேர்த்துக் கொள்ளாத  தகைமையாளராக அவர் வாழ்ந்து மறைந்தார்

கக்கன் ஜூன் 18, 1908 ல்,  மதராஸ் ராசதானியாக தமிழகம் இருந்தபொழுது  மதுரை மாவட்ட, மேலூர் தாலுகாவிலுள்ள  தும்பைபட்டி  கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர். தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் மேல்நிலைப் படிப்பிற்காக  திருமங்கலம் வந்து அங்கே ஓர் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்தார்.

கக்கன் தனது இளவயதிலேயே சுதந்திரப்  போராட்டத்தில் ஈடுபடலானார். பள்ளி மாணவப்பருவத்திலேயே காங்கிரஸ்  இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது.  தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக, ராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினை கொண்டு வந்ததன் விளைவாக, தலித்துக்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைய தடை செய்யப்பட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது. மதுரையில் கக்கன் தலித்துக்கள் மற்றும் சாணார்களுடன்  (1939, ஜூலை 8)  மதுரை கோயிலினுள் நுழைந்தார். மதுரை வைத்தியநாத அய்யர் தலைமையில் நடந்த இப்போராட்டம், தீண்டாமைக்கு எதிராக மாபெரும் வெற்றி பெற்றது. ஹரிஜன மக்களும் ஆலயங்களில் நுழைய உரிமை பெற்றனர்.

நாட்டு விடுதலைப் போரிலும் கக்கன் தீவிரமாக ஈடுபட்டார்.  வெள்ளையனே  வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற கக்கன், அலிப்பூர் சிறையில்  அடைக்கப்பட்டார். 1946 ல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று  1946 முதல் 1950 வரை உறுப்பினராக பொறுப்பு வகித்தார். கக்கன் இந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராகவும்  1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார்.

காமராஜர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார். அவர் காங்கிரஸ் தலைவராக இருந்த காலகட்டமே காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிப்பூசல் இல்லாத காலகட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. கக்கன் தலைவராக இருந்த காலகட்டத்தில் நடந்த தேர்தலில் தான் தமிழக காங்கிரஸ் 155  சட்டசபைத் தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்தது.

1957 ல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை (மின்துறை நீங்கலாக), ஹரிஜன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப். 13, 1957 ல் பொறுப்பேற்று கொண்டார். மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஏப். 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அக். 3, 1963. அன்று மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 1967 ல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கும் வரை அப்பொறுப்பிலிருந்தார் .

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக  ஹரிஜன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவசாயப் பல்கலைக் கழகங்கள் மதராஸ் மாகாணத்தில் துவக்கப்பட்டன. இவரின் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999  ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

1967 சட்டமன்றத் தேர்தலில் கக்கன் மேலூர் (தெற்கு) தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  திமுக வேட்பாளர் ஒ.பி. ராமனிடம் தோற்றார். இத்தேர்தல் தோல்விக்குப் பின் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார்.

கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார்.மகாத்மா காந்தியின் வழியைப் பின்பற்றி நடப்பவர். பெரியார் ஈ.வே.ராமசாமி சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான ராமரின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு தனது கடும் கண்டணத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார். அந்நாளில் பெரியாரை கண்டித்து பேசுவதே பிரச்னையை ஏற்படுத்துவதாக இருந்தபோதும், அச்சமின்றி, தனது அரசுக் கடமையை அவர் நிறைவேற்றினார். அதற்காக பெரியாரை கைது செய்யவும் அவர் தயங்கவில்லை. ஹரிஜனங்களை ஹிந்துவிரோதமாக மாற்ற அரசியல் சூழ்சிகள் நடந்துவரும் சூழலில், கக்கன் தெளிவான நிலையை எடுத்து, தனது சமுதாயத்திற்கு வழிகாட்டினார்.

அமைச்சராக இருந்தபோது பேருந்துக்குக் காத்திருந்து பயணித்தவர் கக்கன். தனது இறுதிக்காலத்தில், படுக்கைகூட இல்லாமல், மதுரை அரசு பொது மருத்துவமனையில் தரையில் படுத்திருந்தவர் கக்கன். அவரது எளிமை, நேர்மைக்கு இதுவே சான்றுகள். சிறு கிராமத்தின் வார்டு உறுப்பினர்கூட படாடோபமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் திரியும் இக்காலகட்டத்தில், கக்கன் போன்றவர்களின் வாழ்க்கையை நாம் நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.

பொதுவாழ்வின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த கக்கன், 1981,  டிச. 23 ல் மண்ணுலகைவிட்டு மறைந்தார்.   பொது வாழ்க்கையில்  உள்ளோருக்கும்,   சமூக சீர்திருத்தவாதிகளுக்கும்,  கக்கன் அரிய முன்னுதாரணம். பதவி என்பது மக்கள் பயனுற வாழவே என்பதை வாழ்ந்து காட்டி மறைந்த பெருந்தகையை இந்நாளில் நினைவுகூர்வோம்.


காண்க:

பி.கக்கன் (விக்கி)

P.KAKKAN

மகத்தான தியாகி (ஈகரை)

வைத்தியநாத அய்யர் பற்றி கக்கன்


காந்தியும் காமராஜரும் கலந்த கலவை

கக்கன் (நக்ஷத்திரா)

.

.