நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

9.6.11

யோகியின் புரட்சிக்குரல்



யோகி பாபா ராம்தேவ் 

ஊழலுக்கு எதிராகவும்  வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணாவிரதம் நடத்திவரும் யோகா குரு பாபா ராம்தேவ் இப்போது பாரதம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கவனிக்கப்படும் பிரபலம் ஆகியிருக்கிறார்இவர் நடத்தும் யோகா ஷிபிரங்களில் (முகாம்கள்)  கூடும் அன்பர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்திற்கு மேல் இருப்பது வழக்கம். பிரபலங்களின் யோகா குருவுக்கு பிராபல்யம் புதிதல்ல. ஆனால், இப்போது பாரதத்தைக் காக்க புதிய அவதாரம் எடுத்திருப்பது தான் பாபா ராம்தேவின் பெருமையை அதிகப்படுத்தி இருக்கிறது.

ராம்தேவின் பிறப்பும் வளர்ப்பும்:

பாரதத்தின் ஹரியானா மாநிலத்தில், மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள அலி சயத்பூரில், ராம் நிவாஸ் யாதவுக்கும்  குலாபோதேவிக்கும்   ஒரு ராமநவமி நாளில் (ஆண்டு தெரியவில்லை) பிறந்த ராம்தேவின் இயற்பெயர் ராமகிருஷ்ண யாதவ். அவரது வீட்டில் மாட்டப்பட்டிருந்த ஹரியானா வட்டார விடுதலைப்போராட்ட வீரர் ராம் பிரசாத்  பிஸ்மில்வங்க வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் படங்களைப் பார்த்தபடியே தவழ்ந்த ராமகிருஷ்ண யாதவ்சிறு வயதிலேயே நாட்டுப்பற்றுடன் வளர்ந்தார்.

மாணவனாக  இருந்த ராகிருஷ்ண யாதவ், புரட்சியாளர் ராம் பிரசாத் பிஸ்மில்லின் சுயசரிதத்தைப் படித்தார். அதன்மூலமாக, நாட்டிற்கு தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் அவருக்கு ஏற்பட்டது. சாஜத்பூரில் எட்டாம் வகுப்பு முடித்தவுடன், கான்பூரில் உள்ள ஆர்ஷ  குருகுலத்தில் யோகா மற்றும் சமஸ்கிருதம் படிக்க இணைந்தார். அங்கு, ஆச்சார்யா பிராதுமன் வழிகாட்டுதலில் யோகக்கலை பயின்றார். ஆச்சார்யா பல்தேவ்ஜி என்பவரிடம் பாடம் கற்ற ராம் கிருஷ்ண யாதவ், சந்யாசம் பெற முடிவெடுத்தார். நாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் துறவே சந்யாசம் ஆகிறது.

அதன்படி, 'சுவாமி ராம்தேவ்' என்ற புதிய நாமத்துடன்  சந்யாசம் ஏற்ற ராம கிருஷ்ண யாதவ், அதன்பின் யோகக்கலையை மக்களிடம் கொண்டுசெல்லும் மாபெரும் இயக்கத்தைத் துவங்கினார்.

ஹரியானா மாநிலத்தின் சிந்த் மாவட்டத்தில் கால்வ குருகுலம் அமைத்து சிலகாலம் இலவசமாக யோகா பயிற்சி அளித்து வந்தார் ராம்தேவ். பிறகு ஹரித்வார் சென்ற ராம்தேவ் அங்குள்ள காங்கரி குருகுலத்தில் பழமையான வேதங்களைப் பயின்றார். அங்கு பல ஆண்டுகள் இருந்த ராம்தேவ், மகரிஷி அரவிந்தர் எழுதி, ராம் பிரசாத் பிஸ்மில் ஹிந்தியில் மொழிபெயர்த்திருந்த 'யோக சாதனை' நூலைப் படித்தார். அதில் கிடைத்த உள்ளுணர்வால்  உந்தப்பட்ட ராம்தேவ், இமாலயம் சென்று பனிபடர்ந்த குகைகளில் தனிமையாக  தியானமும் தவமும் செய்து புத்துணர்வு பெற்றார்.

பிரபல யோகியாக வளர்ச்சி:

இமயத்திலிருந்து திரும்பிய யோகி பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணா துணையுடன் 2003 ல் திவ்ய யோக  மந்திர் அறக்கட்டளையைத் துவங்கினார். 'ஆஸ்தா' தொலைகாட்சி அலைவரிசையில் பாபா ராம்தேவ் நிகழ்த்திய யோகா பயிற்சி வகுப்பு அவருக்கு உலகம் முழுவதும் பயிற்சியாளர்களைக் கிடைக்கச் செய்ததது

மிகக் குறுகிய காலத்திலேயே யோகா குருவாக உருவெடுத்த ராம்தேவ், மாபெரும் யோகா சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்இவரது யோகா சாம்ராஜ்யத்தின் மதிப்பு ரூ. 1100 கோடி ரூபாய். இதனை தனது யோகா பயிற்சி, ஆயுர்வேத சிகிச்சை மூலமாகக் கிடைத்த வருவாய் மூலமாகவே சாதித்தார். 'நான் நாட்டு மக்களின் உள்ளத்தையே கொள்ளை அடித்தேன்; நாட்டை அல்ல' என்று தனது அமைப்பின்  சொத்து விபரங்களை வெளியிட்டபோது (ஜூன் 9) பாபா ராம்தேவ் குறிப்பிட்டது குறிப்பிடத் தக்கது.

2006 , ஆக. 6  ல், ஹரித்வாரில், அன்றைய துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத்தால், ராம்தேவின் ‘பதஞ்சலி  யோக பீடம்  அறக்கட்டளை துவக்கப்பட்டது. இது பாபா ராம்தேவின் கனவுத் திட்டமாகும். யோகாஆயுர்வேதம்  ஆகியவற்றில் பயிற்சி, சிகிச்சை, ஆராய்ச்சி செய்வதற்கான நாட்டிலேயே மிகப்பெரிய நிறுவனமாக இதனை உருவாக்குவது அவரது லட்சியமாக இருந்தது. அதை விரைவில் அவர் சாதித்தார்.

இங்கு ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை இலவசம்; வசதி படைத்தவர்கள் குறைந்த கட்டணத்தில் யோகா, ஆயுர்வேதம் இணைந்த சிகிச்சை பெறலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன் பிரச்னைகளுக்கு யோகா மூலம் தீர்வு காண்பதற்கான ஆராய்சிகள் இங்கு நடந்து வருகின்றன.

பதஞ்சலி  ஆயுர்வேத கல்லூரி, பதஞ்சலி சிகிச்சாலையா, யோகா கிராமம், கோசாலை, பதஞ்சலி மூலிகை தாவரவியல் பூங்கா, இயற்கை வேளாண்மைப் பண்ணை, பதஞ்சலி மூலிகை மற்றும் உணவு பூங்கா ஆகியவை, பதஞ்சலி யோகபீடத்தின் துணை நிறுவனங்களாகும்.

'திவ்ய பிரகாஷன்' என்ற வெளியீட்டு நிறுவனத்தையும் ராம்தேவ் நடத்துகிறார். இதன்மூலமாக, யோகா, ஆயுர்வேதம் தொடர்பான நூல்கள் வெளியிடப்படுகின்றன. 'யோகா சந்தேஷ்' என்ற மாத  பத்திரிகையை ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம், பஞ்சாபி, வங்காளி, ஒரியா, அசாமி, நேபாளி, கன்னடம், தெலுங்கு ஆகிய 11   மொழிகளில் இந்நிறுவனம் வெளியிடுகிறது. இந்த பத்திரிகைகளை மாதந்தோறும் ஒரு கோடிக்கு மேற்பட்ட வாசகர்கள் படிக்கிறார்கள்.

உலகம் முழுவதும் பாபா ராம்தேவுக்கு அன்பர்கள் உள்ளனர். வெளிநாடுகளிலும் பதஞ்சலி யோகபீட கிளைகள் திறம்பட இயங்குகின்றன. வெளிநாடுவாழ் யோகா அன்பர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதற்காக, ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள லிட்டில் கம்பரே தீவை ரூ. 2  கோடி மதிப்பில் விலைக்கு வாங்கி அங்கு அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் பதஞ்சலி யோகபீடம் (யு.கே) அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

பாரத் ஸ்வாபிமான் அந்தோலன்:

தனது யோகா வழிகாட்டுதல்களால் கோடிக்கணக்கான அன்பர்களைப் பெற்ற பாபா ராம்தேவ், அவர்களை நாட்டுநலனுக்கு உகந்த வழியில் பயன்படுத்த, சமூக சேவகர் ராஜீவ் தீக்ஷித்துடன் இணைந்து  'பாரத் ஸ்வாபிமான் அந்தோலன்' என்ற பாரத சுயமரியாத இயக்கத்தை துவக்கினார். தனக்கு எந்த அரசியல் லாப நோக்கமும் இல்லை என்ற அவர், யோகக்கலை மூலமாக சமூக, அரசியல் நிலைகளில் மறுமலர்ச்சி கொண்டுவர விரும்புவதாகவும் அறிவித்தார்.

தான் நடத்தும் யோகா ஷிபிரங்களில் தேசபக்தியையும் நாட்டு வளர்ச்சியையும் வலியுறுத்தி பிரசாரம் செய்யும் பாபா ராம்தேவ், அரசியல், சமூக, பொருளாதார அம்சங்களில் தெளிவான நிலைப்பாடுகளை தனது யோகா அன்பர்களுக்கு போதித்து ருகிறார். இதனால், பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் கண்டனத்திற்கும் ஆளானார். ஆயினும் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல்நாட்டு நலனுக்கேற்ற கருத்துக்களைத் தொடர்ந்து முனவைத்து வருகிறார் பாபா ராம்தேவ்.

பாரத் ஸ்வாபிமான் அந்தோலனின் ஐந்து இலட்சியங்கள்:
1. தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவை உறுதிப்படுத்துதல்.
2. நூறு சதவிகித தேசிய சிந்தனையை மக்களிடம் வளர்த்தல்.
3. அந்நிய நிறுவனங்களை முற்றிலும் பகிஷ்கரித்தல்; சுதேசி இயக்கத்தை தீவிரப்படுத்துதல்.
4. நாட்டுமக்களை ஒன்றுபடுத்துதல்.
5. நாட்டை யோகாவை மையமாகக் கொண்டதாக முழுமையாக வளர்த்தெடுத்தல்.

மேற்கண்ட கொள்கைகளை வலுப்படுத்த நாடு முழுவதும் யோகா முகாம்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ராம்தேவ். அதன் ஓரம்சமாகவே, நாட்டை சீரழிக்கும் ஊழலுக்கு எதிராகவும், நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் கறுப்புப் பணத்திற்கு எதிராகவும் ராம்தேவ் போராடி வருகிறார்.

சமூக விழிப்புணர்வுப் பணிகள்:

துரித உணவு, பன்னாட்டு நிறுவனங்களின் செயற்கை குளிர்பானங்களால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடுகள் குறித்து தனது யோகா முகாம்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பாபா ராம்தேவ், இயற்கையான, பாரம்பரியமான உணவுமுறைகளையே  இந்தியர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திகிறார்.

கோலா பானங்கள் கழிவறை சுத்திகரிப்பான்களாக இருக்கவே தகுதி படித்தவை என்பது ராம்தேவின்  பிரகடனம்பாஸ்போரிக்  அமிலம் கலந்துள்ள செயற்கை குளிர்பானங்களுக்கு  மாற்றாக, சூடான குடிநீர், பால், பழச்சாறு போன்றவற்றையே அருந்த வேண்டும் என்று ராம்தேவ் அறிவுறுத்துவது வழக்கம். பன்னாட்டு நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் மயங்கி செயற்கை குளிர்பானங்களை மக்கள் அருந்துவதால் நமது பணம் வெளிநாடுகளுக்கு செல்கிறது என்றும் ராம்தேவ் எச்சரிக்கை செய்து வருகிறார்.

விவசாய நிலங்களில் செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதையும் ராம்தேவ் எதிர்க்கிறார். தனது இயற்கை வேளாண் பண்ணையில் மாதிரி வேளாண் முறைகளை இயற்கை சாகுபடி தொழில்நுட்பத்தில் உருவாக்கிக் காட்டி இருக்கிறார். உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் இயற்கை விவசாயத்தை அழித்து மண்ணை மலடாக்கிவிடும் என்பது ராம்தேவின் எச்சரிக்கை. விவசாயமே நாட்டின் முதற்பெரும் தொழிலாக இருக்கும்போதிலும், நாட்டிலேயே மிகவும் ஏழைகளாக இருப்பவர்களும் விவசாயிகளே. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பது ராம்தேவின் கருத்து.

நாட்டின் கனிம வளத்தைச் சுரண்டும் சட்டவிரோத சுரங்கங்களுக்கு எதிராகவும் ராம்தேவ் குரல் கொடுத்து வருகிறார். நாட்டில் அனுமதி பெற்று இயங்கும் சுரங்கங்களின் எண்ணிக்கை 200  மட்டுமே; ஆனால், பல்லாயிரம் சுரங்கங்கள் அரசியல்வாதிகளின் பினாமிகளால் சட்டவிரோதமாக அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்படுகின்றன என்று இவரது பாரத் ஸ்வாபிமான் இயக்கம் குற்றம் சாட்டுகிறது.

இவரது ஆன்மிகம் சார்ந்த பிரசாரங்களால் வெறுப்புற்ற இடதுசாரிகள் (குறிப்பாக மார்க்சிஸ்ட்கள்) இவரது ஆயுர்வேத மருந்து தயாரிப்புகள் குறித்து பொய்ப்பிரசாரம் செய்ததுண்டு. திவ்ய யோகா மந்திரில் தயாராகும் ஆயுர்வேத மருந்துகளில் விலங்குகளின் பாகங்கள் இருப்பதாக பிரசாரம் நடைபெற்றது. ஆனால், அரசு ஆய்வகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அப்படிப்பட்ட எந்த முடிவுகளும் கிடைக்கவில்லை.

ஒருபால் உறவு, எய்ட்ஸ் நோய் தொடர்பான வெளிப்படையான கருத்துக்களால் ராம்தேவ் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பாலியல் கல்விக்கு மாற்றாக யோகக்கல்வி பயிற்றுவிப்பதே  எய்ட்ஸ் நோயை ஒழிக்கும்; ஒருபாலுறவு கொள்பவர்களை மனநோயாளிகளாகக் கருதி சிகிச்சை அளிக்க வேண்டும் ஆகியவை ராம்தேவின் கருத்துக்கள்.

அதேபோல புற்றுநோயை யோகா சிகிச்சையால் குணப்படுத்த முடியும் என்று (2008)  நிரூபித்தார் ராம்தேவ். ஆனால், மருத்துவ ஆராய்ச்சி மூலமாக இதனை நிரூபிக்க வேண்டும் என்று கூறி  விமர்சகர்கள் அதனை ஏற்கவில்லை. ஆயினும் யோகா மூலமாக பலநூறு நோயாளிகள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படுத்தி வருகிறார் ராம்தேவ்.  

ஊழலுக்கு எதிரான போராட்டம்: 

நாட்டின் பொருளாதராத்தை சீர்குலைக்கும் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும், வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்கவும், கறுப்புப் பணத்திற்குக் காரணமான ஊழலை ஒழிக்கவும், ராம்தேவ் கடந்த ஐந்தாண்டுகளாகவே போராடி வருகிறார். சமீப காலமாக இந்திய அரசியலில் அதிகரித்துள்ள ஊழலால் மனம் வெதும்பிய அவர், மத்திய அமைச்சர்களின் ஊழல்களுக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்தார். அதன் விளைவாக மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் வெறுப்புக்கு ஆளாகி உள்ளார்.

ஊழலுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டம் அன்னா ஹசாரே தலைமையில் (ஏப்ரல் 5, 2011 ) நடந்தபோது, அதற்கு ஆதரவாக களம் இறங்கினார். உண்மையில் ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்னதாகவே நாடு தழுவிய அளவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பாபா ராம்தேவால் திட்டமிடப்பட்டது. அதனை அறிந்த அரசு சார்பு என்.ஜி.ஓக்கள், ஹசாரேவை முன்னிறுத்தி உண்ணாவிரதத்தைத் துவங்கிவிட்டனர் என்ற புகார் உள்ளது. ஆயினும், அந்தப் போராட்டத்திற்கு பாபா ராம்தேவ் ஆதரவு தெரிவித்தார். ஊழல் புரியும் அதிகார வர்க்கத்தை தண்டிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்திற்காக தற்போது அன்னா ஹசாரேவும் பாபா ராம்தேவும் ஒத்த சிந்தனையுடன் போராடி வருகின்றனர்.

கறுப்புப் பணத்தை ஒழிக்க பாரத் ஸ்வாபிமான் இயக்கம் கீழ்க்கண்ட வழிமுறைகளை முனைக்கிறது:
1. பெருமளவிலான கறுப்புப் பணத்திற்கு காரணமாகும் ரூ. 1000 , ரூ. 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து அகற்ற வேண்டும்.
2. ஊழலுக்கு எதிரான .நா. மாநாட்டுத் தீர்மானத்தை (2006) உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
3. லஞ்ச, ஊழல் குற்றங்களில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தைத் திருத்த வேண்டும்.
4. ஊழல் பெருச்சாளிகளின் வரவு- செலவு விபரங்களை அரசு கண்காணித்து முடக்க வேண்டும்.
5. அந்நிய வங்கிகளின்  கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட் உபயோகங்களை முறைப்படுத்த வேண்டும்.
6. வெளிநாடுகளில் வரி செலுத்தாமல் பதுக்கிவைக்க தோதாக உள்ள அனைத்து வங்கிகளிலும் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்களை அறிந்து அவற்றை கைப்பற்றி இந்திய கருவூலத்தில் சேர்க்க வேண்டும்.

- மேற்கண்ட ஆலோசனைகள், செயல்படுத்த இயலாதவை என்று அரசாலும் ஆளும் அரசியல்வாதிகளாலும் நிராகரிக்கப்படுகின்றன. ஆனால், அரசு முயன்றால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க முடியும். இதனை தேர்தல்காலத்தில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதியாகவே முன்வைத்தது என்று நினைவுபடுத்துகிறார் பாபா ராம்தேவ்.

ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட பல வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தின் மதிப்பு 1.5  ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்குமென்று ராம்தேவ் மதிப்பிடுகிறார். ஒரு ட்ரில்லியன் என்பது மில்லியனின் (பத்து லட்சம்) மூன்று மடங்காகும். அமெரிக்க டாலர் மதிப்பில் இந்திய ரூபாயை மாற்ற சுமார் 45  ரூபாய் ஆகிறதுஆக, 1.5  ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது, சுமார் '68 லட்சம் கோடி கோடி' ஆகும். இந்த அளவுக்கு ஊழல் பெருச்சாளிகளால் இந்தியப் பணம் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டால் நாடு எவ்வாறு முன்னேறும் என்று கேள்வி எழுப்பும் ராம்தேவ், இதற்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரி வருகிறார். 

ராம்லீலா மைதான உண்ணாவிரதம்:

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுதில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஜூன் 4, 2011 ல் சாகும்வரை உண்ணாவிரதம் துவங்கிய ராம்தேவுக்கு ஆதரவாக யோகா அன்பர்கள் 25  ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குழுமினர். இதனை அராஜக முறையில் நசுக்கிய மத்திய அரசு நள்ளிரவில் நடத்திய தடியடி இப்போது உலகம் முழுவதும் கண்டனங்களை எழுப்பி இருக்கிறது.

புதுதில்லியில் உண்ணா விரதத்தை அரசு குலைத்த போதிலும் மனம் தளராமல், உத்தரகான்ட் மாநிலத்திலுள்ள ஹரித்வாரில் தனது பதஞ்சலி யோகபீடத்தில் இருந்தபடி உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார் பாபா ராம்தேவ். இவருக்கு ஆர்.எஸ்.எஸ்., பா.. உள்ளிட்ட பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

பாபா ராம்தேவ் தாக்கப்பட்டதைக் கண்டித்து அன்னா ஹசாரே தில்லி, ராஜ்காட்டில் (ஜூன் 8) இருந்த உண்ணாவிரதம் நாட்டில் விழிப்புணர்வை அதிகரித்திருக்கிறது. லோக்பால் சட்டத்திற்காக அன்னா ஹசாரேவும், கறுப்புப் பணத்திற்கு எதிராக பாபா ராம்தேவும் நடத்தும் தொடர் போராட்டங்களால் இந்தியாவில் புதிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. ஊழலுக்கு  எதிராக மக்களை ஒன்றுபடுத்தும் பணியில் இவர்கள் இருவரும், தங்கள் மீதான அரசு சார்பு பொய்ப்பிரசாரங்களை நிராகரித்து, தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்கள் இருவரையும் ஆர்.எஸ்.எஸ்கைக்கூலிகள்  என்று மத்திய அமைச்சர்கள் சிலரும் காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் ஏளனம் செய்கிறார்கள். இருவரது பொதுவாழ்க்கை குறித்த அபத்தமான சந்தேகங்களையும் தங்களுக்கு சார்பான ஊடகங்கள்  வாயிலாக வெளிப்படுத்தி ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முனை மழுங்கச் செய்ய சிலர் முயன்று வருகிறார்கள். ஆனால், நாட்டு மக்கள், இவர்களது தன்னலமற்ற முயற்சியின் பின்னணியையும், அதன் முக்கியத்துவத்தையும் அறிந்தே உள்ளனர். அவர்கள் ஊழலுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் திரண்டு வருவது நாட்டின் ஆரோக்கியத்திற்கு  நன்மை அளிப்பதாக உள்ளது.

பல விருதுகளையும் பல கண்டங்களையும் பெற்றாலும், எதிலும் நிலைகுலையாமல், பரிபூரண யோகியாக நம்மிடையே வாழ்ந்துவரும்  யோகா குரு பாபா ராம்தேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் வெல்லட்டும்.

-சேக்கிழான் 

காண்க:














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக