நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

17.6.11

தமிழ்மறம் காட்டிய மாவீரன்



வீர வாஞ்சிநாதன்
பலிதான நூற்றாண்டு தினம்: ஜூன் 17


நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தென்னகத்தின் போராட்டக் களத்தை விலைமதிப்பு மிக்கதாக மாற்றிய நிகழ்ச்சி ஆஷ்துரை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம். ஆங்கிலேயர் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உயிர்நீத்த தினம் 1911, ஜூன் 17-ம் தேதி. இன்றோடு 100 ஆண்டுகளைக் கடந்து விட்டது என்றாலும், இன்றும் பேசப்படும் நிகழ்ச்சியாக இது அமைந்துவிட்டது.
 
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர்,  ருக்மிணி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் வாஞ்சிநாதன். இயற்பெயர் சங்கரன். ஆனால், அவரை வாஞ்சி என்றே அனைவரும் அழைத்துள்ளனர். செங்கோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்த வாஞ்சி, திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
 
கல்லூரியில் படிக்கும்போது பொன்னம்மாளுடன் திருமணம் நடந்தது. தொடர்ந்து, புனலூர் வனத்துறையில் பணியாற்றினார் வாஞ்சி. ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சத்தை அடைந்திருந்த நேரம்.
 
அந்த நேரத்தில், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுகளால் திருநெல்வேலி பகுதியில் சுதந்திர இயக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவற்றால் ஈர்க்கப்பட்ட வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
 
இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்ட புரட்சியாளர்களுக்கு, பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் இருந்து உதவிகள் கிடைத்து வந்தன. அங்குள்ள புரட்சியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட வாஞ்சி, அரசுப் பணியில் இருந்து விலகி, புரட்சிப் பாதைக்கு மாறினார். நண்பர்களுடன் இணைந்து ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார்.
 
புதுவையில் புரட்சியாளர் வ.வே.சு. ஐயர் வீட்டில் வாஞ்சி தங்குவது உண்டு. அங்கு மகாகவி பாரதியாரையும் சந்தித்துள்ளார். இந்தியர்கள் நடத்தி வந்த சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியை இந்தியர்கள் நடத்தக் கூடாதென்று தடுத்தது வெள்ளையர் அரசாங்கம். சுதேசி கப்பல் கம்பெனியை நடத்தப் பாடுபட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தது.
 
இதற்கெல்லாம் காரணமாக இருந்த திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் துரையைக் கொல்வது என்று வாஞ்சி சார்ந்திருந்த பாரதமாதா சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, வாஞ்சிநாதனே இந்தப் பணியை மேற்கொள்வது என்று தீர்மானம் ஆனது.
 
1911, ஜூன் 17. அன்று காலை 10.45 மணி. திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள மணியாச்சி ரயில்நிலைய சந்திப்பில் திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ்துரை தன் மனைவியுடன் கொடைக்கானலுக்குச் செல்ல ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்தார். அதுவே சரியான தருணம் என்று எண்ணிய வாஞ்சி, ஆஷ்துரையை தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
 
காவலர்களிடம் பிடிபட்டால் தான் சார்ந்திருக்கும் பாரதமாதா சங்கம் பற்றிய ரகசியம் தெரிந்துவிடும் என்பதால், அருகே இருந்த கழிப்பிட அறை நோக்கி ஓடினார். அதனுள் சென்றவர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். அவர் அணிந்திருந்த சட்டைப் பையில் இருந்த துண்டுக் கடிதத்தில், ஆஷ்துரையை சுட்டுக் கொன்றதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
 
திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும். வாஞ்சி வீரமரணம் எய்திய மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சி - மணியாச்சி சந்திப்பு என்ற பெயர் சூட்டப்பட்டது. வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் கம்பீரமான உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நாளில் வாஞ்சியின் செயலுக்கும் வீரத்துக்கும் மரியாதை செலுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஊர்வலமாக வந்து, வாஞ்சியின் சிலைக்கு மாலை அணிவித்து சபதம் எடுக்கிறார்கள்.
 
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய மாணவ சமுதாயம் தெரிந்துகொள்ளும் வகையில் அனைத்து வகுப்புகளிலும் பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்திய மண்ணில் சிந்திய ரத்தத்தின் வலிமையை மாணவ சமுதாயம் அறிய முடியும்.
 
-மா.வீரபாண்டியன்
நன்றி: தினமணி
 
காண்க:
 
வாஞ்சிநாதன் (விக்கி)
 
VANCHINATHAN

மானம் காத்த மாவீரன் (பாரதி பயிலகம்)

வீரன் வாஞ்சிநாதன்

வாஞ்சிநாதன் நூற்றாண்டு நினைவுதினம்

விடுதலைவீரன் வாஞ்சிநாதன்

GREAT PEOPLE OF TAMILNADU

AN IRISH LINK  (FrontLine)

சுதந்திரப்போராட்ட வீரர் வரிசையில் (கூட்டஞ்சோறு)

ஆஷ் துரை (விக்கி)

Robert  William  Escourt  Ashe

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக